தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலையில் மண்ணினை அள்ளிக்கொட்டியிருக்கின்றது எனவும் இதற்கான பெறுபேற்றை அவர்கள் அனுபவிப்பார்கள் எனவும் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான ஊடக சந்திப்பு நேற்று (புதன்கிழமை) மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் எந்தொரு கட்சியும் எதிர்ப்பதாக இருந்தால் ஏதாவது காரணத்தினை சொல்லவேண்டும். வரவுசெலவுத் திட்டத்தொடரில் முதல்வர் தன்னிச்சை சட்டம் ஊடாக செயற் படுகின்றார் என கூறுவது விடயம் கிடையாது.
வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் எதிராக வாக்களிப்பது என அரசியல் ரீதியாக கட்சித்தலைப்பீடம் முடிவு எடுத்துவிட்டனர்.
அதனால், சம்பிரதாயப்பூர்வமாக சபைக்கு வந்து தமது எதிர்ப்பினை உறுப்பினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு நான் மாநகர முதல்வராக பதவி வகித்ததன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டு நடுநிலை வகித்தனர். காரணம் உடனடியாக தோற்கடிப்பு செய்யப்பட்டால் சபை கலைந்துவிடும் என்ற காரணத்தால் நடுநிலை வகித்தனர்.
நான் பதவியேற்று தன்னிச்சையாக செயற்பட்டேன் என்று இல்லை. கடந்த முறையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராகத்தான் வாக்களித்தது.
அரசியல் கட்சிகள் தங்களுடைய விருப்புவெறுப்புக்கு அப்பால் தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும். தாங்களுடைய அரசியல் நலனுக்காக தீர்மானங்களை எடுத்துக்கொள்ளுவார்கள்.
இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்கள் நலன் என கருதி எதிர்காலத்தில் செல்வாக்கை அதிகரிக்கலாம் என எண்ணி இந்த வரவு – செலவுத்திட்டத்தினை தோற்கடித்தனர்.
என்னை முதல்வர் பதவியிலிருந்து அகற்றமுடியும் என எண்ணியிருக்கலாம். இது தாங்களின் வளர்ச்சிக்காகவும், அழிந்து செல்லுவதற்காகவும் இருக்கலாம். இதற்கு காலம் தான் பதில் சொல்லும்.“ எனத் தெரிவித்துள்ளார்.