அடுத்த ஆண்டின் இந்திய பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (வெள்ளிக்கிழமை) கொச்சினில் நடைபெறவுள்ளது.
இதில் 87 இடங்களுக்காக 404 வீரர்கள் போட்டியிடவுள்ளனர். ஏலத்தில் வீரர்களை வாங்கும் பத்து அணிகளிலும் 30 வெளிநாட்டு வீரர்களுக்கே இடம் உள்ளது.
எனினும் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இணை அங்கத்துவ நாடுகளின் நான்கு வீரர்கள் இன்றைய ஏலத்தில் போட்டியிடுகின்றனர்.
இங்கிலாந்து சகலதுறை வீரர்களான சாம் கரன், பென் ஸ்டொக்ஸ், மேற்கிந்திய தீவுகளின் விக்கெட் காப்பாளர் நிகொலஸ் பூரன், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஹரி ப்ரூக், இந்திய துடுப்பாட்ட வீரர் மாயன் அகர்வால் மற்றும் அவுஸ்ரேலிய சகலதுறை வீரர் கெமரன் கிரீன் ஆகியோர் அதிக விலைபோவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மற்றும் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் கடந்த ஐ.பி.எல் தொடரில் முறையே லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடஸ் அணியில் இடம்பெற்ற நிலையிலேயே அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதனைதவிர, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க, பத்தும் நிசங்க, சரித் அசலங்க, லஹிரு குமார, டில்ஷான் மதுசங்க, தனஞ்சய டி சில்வா, துனித் வெள்ளாலகே ஆகியோரும் இன்றைய ஏலத்தில் இடம்பெறுகின்றனர்.
இலங்கை வீரர்கள் அனைவரும் இந்திய நாணயப்படி 50 இலட்சம் ரூபாய் அடிப்படை விலைக்கே ஏலம் விடப்படவுள்ளனர்.
2023 ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் தொடக்கம் மே மாதம் வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இலங்கையின் நான்கு வீரர்கள் தத்தமது அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
வனிந்து ஹசரங்கவை ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர், மஹீஷ் தீக்ஷனவை சென்னை சுப்பர் கிங்ஸ், பானுக்க ராஜபக்ஷவை பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மதீஷ பத்திரணவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் தக்கவைத்துக்கொண்டன.