இலஞ்சம், ஊழல், மற்றும் கொள்ளையிடுவோருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பில் 3 தேர்தல் தொகுதிகள், 616 வாக்குச்சாவடிக்கள், 14 பிரதேச செயலாளர் பிரிவுகள், 345 கிராம சேவை உத்தியோகஸ்த்தர் பிரிவுகள், 1240 குக்கிராமங்கள் காணப்படுகின்றன.
இலட்சக்கணக்கான மக்கள், இம்மாவட்டத்தில் வாழ்கின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் இம்மாவட்டத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களின் பிரச்சனைகளையும், தீர்த்து வைப்பதற்கு எதிர்காலத்தில் பொறுப்பெடுப்போம் என்று நான் உறுத்தியெடுத்துக் கொள்கின்றேன்.
கடந்த காலத்திலிருந்து வந்த அரசாங்கங்களும், எதிர்க்கட்சியினரும், மாறி மாறி மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு மக்களுக்கு மானியம் வழங்குவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள். இவர்கள் மத்தியிலே நாங்கள் வித்தியாசமானவர்கள்.
நாட்டின் தலையெழுத்தை மாற்றும் நோக்குடன் எதிர் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மிகவும் திறம்பட மக்களுக்குச் சேவை செய்து கொண்டிருக்கின்றோம். அதனை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
நாம் இவ்வாறு அபிவிருத்திகளைச் செய்யும்போது சிலர் சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் இந்நாட்டின் இன்றய நிலைமை.
கல்வியிலும், சுகாதாரத்திலும் வீழ்ந்துகிடக்கின்ற நாட்டைக் கட்டியயெழுப்ப வேண்டும்.
வெளிநாடுகளுக்கு நிகரான ஒரு டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாணவர்கள் முன்னேற வேண்டும்.
இலஞ்சம், ஊழல், மற்றும் கொள்ளையிட்டு நாட்டையே சூறையாடியவர்களுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு.
மாலை மரியாதை செய்து அவர்களை சிம்மாசனத்தில் அமர்தியததான் இந்த நாடு. அவ்வாறானவர்களுக்கு மக்களின் பசி, கண்ணீர் புரிவதில்லை.
இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளை இதனைத்தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.