செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையே பல வாரங்களாக அதிகரித்து வரும் பதற்றங்களுக்குப் மத்தியில், செர்பிய இராணுவம் அதன் உயர் மட்ட போர் தயார்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களை பாதுகாக்கவும் செர்பியாவைப் பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் தெரிவித்துள்ளார்.
வட கொசோவோவில் உள்ள செர்பிய இனப் பகுதிகள் மீது கொசோவோ தாக்குதல் நடத்துவதற்கு தயாராகிவருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும், இந்த பிரச்சினையை சுமூகமாக மத்தியஸ்தம் செய்து முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்து வருகிறது.
27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், அதிகபட்ச கட்டுப்பாடு மற்றும் உடனடி நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கிறது.
மேலும், செர்பியா மற்றும் கொசோவோ தலைவர்கள் தனிப்பட்ட முறையில் அரசியல் தீர்வுக்கு பங்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
கொசோவோவை சுதந்திர நாடாக அங்கீகரிக்க செர்பியா மறுக்கிறது. அல்பேனிய இனத்தை பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ, 1998-99இல் நடந்த போருக்குப் பிறகு செர்பியாவிலிருந்து பிரிந்தது.
கொசோவோவில் அமைதி காக்கும் படைகளை கொண்டுள்ள நேட்டோ, ஆத்திரமூட்டல்களை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பொலிஸ்துறை மீதான தாக்குதல்களையோ அல்லது குற்றச் செயல்களையோ பொறுத்துக் கொள்ள மாட்டோம் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.