இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் அழையா விருந்தாளியாக கருத்துச் சொல்வது அவசியம் அற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் எரிக் சொல்ஹெய்மினுடைய தகுதி என்ன? எந்த நாட்டினுடைய பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார்? யாருடைய தூண்டுதலில் தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் பற்றி கருத்து கூற முற்படுகிறார்? எனவும் அந்த ஊடக அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் இனப்பிரச்சினையை தொடர்பான நடவடிக்கைகளில் தமிழ்த் தலைவர்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டியுள்ள நிலையில் எரிக் சொல்ஹெய்ம் தன்னுடைய உத்தியோகபூர்வமான பணிகளை மட்டும் செய்யட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.