உய்குர் பகுதி, திபெத் மற்றும் சீனாவின் பிற இடங்களில் மரபணுக்களைப் பெற்று கண்காணிப்பை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பங்களை சீன அரசாங்கத்திற்கு வழங்கும் நிறுவனங்களுடன் வணிக நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உலகெங்கிலும் உள்ள நாடுகளைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்தந்த அரசாங்கங்களை வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டணியின் உறுப்பினர்களான நாங்கள், சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்தால், சிறுபான்மையினர் மீதான கண்காணிப்பை அதிகரிக்க, வெகுஜன மரபணுச் சேகரிப்பைப் பயன்படுத்துவதில் எங்களின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றோம் என்று திபெத்திய மற்றும் உய்குர் பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டுக்கடிதத்தின் ஊடாகத் தெரிவித்துள்ளனர்.
இன்டர்-பாராளுமன்றக் கூட்டணி என்பது, சீன மக்கள் குடியரசு குறித்த உறவுகளில் கவனம் செலுத்தும் சர்வதேச, ஜனநாயக நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டணியாகும்.
இந்நிலையில், அன்னா ஃபோட்டிகா எம்.பி., அவுஸ்திரேலிய செனட்டர் கிளாரி சாண்ட்லர், கனேடிய எம்.பி ஆரிப் விரானி, ஐரிஷ் செனட்டர் மைக்கல் மெக்டோவல், நியூசிலாந்தின் எம்.பி சைமன் ஓஷ்கானர் எம்.பி. ஐக்கிய இராச்சியம் ஆகியோரே கூட்டுக் கோரிக்கைகள் விடுத்தவர்கள் ஆவர்.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் பிற குழுக்களின் அறிக்கைகளின் பிரகாரம் 2016 ஜூன் முதல், திபெத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை – பல குழந்தைகள் உட்பட – திபெத்தின் தன்னாட்சிப் பகுதியில் சீன அதிகாரிகள் வெகுஜன மரபணு சேகரிப்புத் திட்டத்தை நடத்தியுள்ளனர்.
அமெரிக்க நிறுவனமான தெர்மோ ஃபிஷர், திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள காவல்துறையினருக்கு மரபணு விவரக்குறிப்பு கருவிகளை வழங்குவதாக அறியப்படுகிறது.
திபெத் மற்றும் ஷின்ஜியாங்கில் வெகுஜன மரபணு சேகரிப்பு பிரசாரம் மனித உரிமைகள் மீதான மொத்த தலையீட்டை உருவாக்குவதோடு திபெத்திய மக்களுக்கு எதிரான சமூகக் கட்டுப்பாட்டின் வடிவத்தை பிரதிபலிக்கிறது.
அவர்கள் ஏற்கனவே தீவிர அரசு கண்காணிப்புக்கு உட்பட்டு அடக்குமுறைக்குள் உள்ளனர்.
இந்த விவகாரத்தை மேலும் விசாரிப்பதற்காக் தெர்மோ ஃபிஷர் உடனான வணிக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு உரிய அரசாங்கங்கள் செயற்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.