அடுத்த வாரம் எல்லைகளை மீண்டும் திறக்கப் போவதாக சீனா அறிவித்ததை அடுத்து, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் பரிசோதனையை விதிக்கும் சமீபத்திய நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.
இத்தாலி, ஜப்பான், தாய்வான் மற்றும் இந்தியாவும் கட்டாய சோதனைகளை அறிவித்தன. ஆனால் அவுஸ்ரேலியா மற்றும் பிரித்தானியா, சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு புதிய விதிகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தன.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உலக நாடுகளுக்கு மூடப்பட்ட கதவுகளை ஜனவரி 8 முதல் திறப்பதாக சீனா அறிவித்தது.
சீனா இந்த வாரம் ஒரு நாளைக்கு சுமார் 5,000 தொற்றுகளை அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்துள்ளது, ஆனால், ஆய்வாளர்கள் எண்கள் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டதாகக் கூறுகின்றனர்.
சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன மற்றும் அடிப்படை மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், தற்போது சீனாவின் தொற்றுநோய் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறினார்.
சில நாடுகளும் ஊடகங்களும் நிலைமையை பெரிதாக்கி காட்டுவதாகவும் சீனாவின் கொவிட் கொள்கை மாற்றங்களை சிதைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.