ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியன்மார் இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம், அவரது ஒட்டுமொத்த சிறைத் தண்டனை 33 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவம் அவரது அரசாங்கத்தை அகற்றியதிலிருந்து நாட்டின் முன்னாள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அப்போதிருந்து, அவர் 18 மாதங்களில் 19 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
அவர் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொண்ட இறுதி ஐந்து குற்றச்சாட்டுகளில் தண்டனை விதிக்கப்பட்டது.
இதில், அரசாங்க அமைச்சருக்கு ஹெலிகொப்டரை வாடகைக்கு எடுப்பதில் அவர் விதிமுறைகளை பின்பற்றாததால், அவர் ஊழல் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கொவிட் பொது பாதுகாப்பு விதிகளை மீறியமை, வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்தல் மற்றும் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 14 வௌ;வேறு குற்றங்களுக்காக அவர் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு அவரது விசாரணைகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அமைக்கப்பட்டன, அங்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு அணுகல் தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் அவரது வழக்கறிஞர்கள் ஊடகவியலாளர்களுடன் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
77 வயதான நோபல் பரிசு பெற்ற இவர், தலைநகர் நே பை தாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்.
அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் (பர்மா) கூற்றுப்படி, ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவ ஆட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட 16,600க்கும் மேற்பட்டவர்களில் சூகி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பலர் உள்ளனர். இதில் 13,000பேர் சிறையில் உள்ளனர்.
கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு சபை, மியன்மாரில் வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் கூறியது. சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் இருந்து விலகின.
சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் பொதுமக்கள் கிராமங்கள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக இராணுவ ஆட்சிக்குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரையில் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய அடக்குமுறையில் 2,600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.