நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் 16 பேர் கொண்ட அணியில் அறிமுக துடுப்பாட்ட வீரர்களான தயப் தாஹிர், கம்ரான் குலாம் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் உசாமா மிர் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஷான் மசூத் மற்றும் ஹரிஸ் சோஹைல் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்படுள்ளனர். ஷர்ஜீல் கானுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வலது ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் பாகிஸ்தான் துணை தலைவர் ஷதாப் கான் அணியில் இடம்பெறவில்லை.
இதேபோல, ராவல்பிண்டியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் மற்றும் ஷாஹீன் அப்ரிடி ஆகியோருக்கு மருத்துவக் குழுவின் ஆலோசனைக்கு அமைய கூடுதல் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
பாபர் அசாம் தலைமையிலான அணியில், ஃபகார் ஸமான், ஹாரிஸ் ரவூஃப், ஹாரிஸ் சோஹைல், இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சல்மான் அலி ஆகா, ஷாநவாஸ் தஹானி, ஷான் மசூத், தயப் தாஹிர், உஸமா மிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடிவரும் பாகிஸ்தான் அணி, அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதன் முதல் போட்டி எதிர்வரும் 9ஆம் திகதி கராச்சியில் நடைபெறவுள்ளது.