உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வரும் நிலையில் உள்ள வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்றும்படி மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், ஹேம்குண்ட் சாஹிப் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கும் அவுலி சுற்றுலாத் தலத்துக்கும் நுழைவு வாயிலான ஜோஷிமட் நகரம் மண்ணில் புதையுண்டு வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள குடியிருப்புகளில் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அத்துடன் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையில் அங்குள்ள கோயில் ஒன்று இடிந்து விழுந்தது.
இந்நிலையில், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அப்பகுதியில் உள்ள அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை காணொளி வாயிலாக உரையாடியபோது, பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை அடுத்து வீதி அமைக்கும் பணிகள், நீர்மின் சக்தி திட்டங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டன.
இச்சம்பவத்தையடுத்து, ஜோஷிமட் நகரம் மண்ணில் புதையுண்டு வருவதற்கான காரணத்தையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும் குறித்து ஆராய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய நீர் ஆணையம், தேசிய தூய்மை கங்கை திட்டம், இந்திய புவியியல் ஆய்வுத் துறை உள்ளிட்டவற்றின் நிபுணர்கள் அடங்கிய குழுவை ஜல் சக்தி அமைச்சகம் அமைத்துள்ளது.