சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வரும் நிலையில், பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சன்னிதானம் மற்றும் சபரிமலை முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மகரவிளக்கு தினத்தன்று கூடுதல் பொலிஸார் நியமிக்கப்படவுள்ளனர்.
இதற்கிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி சன்னிதானம் செல்லவும், அங்கு 18ஆம் படி ஏறவும் தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
இதற்காக நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் வரை பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று முதல் இவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை தவிர பேரிடர் மீட்பு படையினர், சுகாதார துறையினர், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
சபரிமலை பொன்னம்பல மேட்டில் எதிர்வரும் 14ஆம் திகதி மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



















