உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலா தலமான ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வரும் நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 678ஆக அதிகரித்துள்ளது.
ஜனவரி 2 மற்றும் 3ஆம் திகதிக்கு இடைப்பட்ட இரவில் வெடித்த நிலத்தடி நீர்நிலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர், நகரத்தில் உள்ள வீடுகள் மற்றும் பிற கான்கிரீட் கட்டமைப்புகளில் விரிசல்களை உருவாக்கியதே வீடுகளில் விரிசல் விழுவதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து புவியியலாளர் பியூஷ் ரவுடேலா கூறுகையில், ‘இந்த நிலத்தடி நீர் ஆதாரத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் நானூறு முதல் ஐந்நூறு லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. இந்த பனிக்கட்டி நீரால், புவியியல் பாறையின் அரிப்பு ஏற்படுகிறது என்றும் இருப்பினும், இந்த நிலத்தடி நீர் ஆதாரத்தின் அளவு என்ன, அது ஏன் திடீரென வெடித்தது என்பது தெரியவில்லை என கூறினார்.
சாமோலி மாவட்ட நிர்வாகம் காலி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து நிபுணர்களின் உயர் மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.