தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”அதாவது எதிர்வரும் காலங்களில் நடத்தப்பட இருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்த வகையில் அதிகூடிய ஆசனங்கள் பெரும்பான்மைக் கட்சிகளுக்கோ, ஒட்டுக் குழுக்களுக்கோ போகாத வண்ணம் ஒரு தீர்க்கமான முடிவினை எடுத்திருக்கிறோம்.
உண்மையில் இந்த முடிவினூடாக எதிர்வரும் காலங்களில் வடக்கு – கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலுமே நாங்கள் பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவில்லாமல் சபைகளின் ஆட்சியை அமைக்கக் கூடிய நிலை உருவாகும்.
கடந்த காலங்களில் நாங்கள் சில பிரதேச சபைகளைப் பார்த்தால் 18, 20 வாக்குகளைப் பெற்றவர்கள் சுயேட்சைக் குழுக்களில் இறங்கி பிரதேச சபைத் தவிசாளர் பதவியைப் பெறக் கூடிய நிலை உருவாகியிருந்தது.
சில பிரதேச சபைகளிலே நாங்கள் பெரும்பான்மையாக வீட்டுச் சின்னத்திலே போட்டியிட்டு, வெற்றி பெற்றிருந்தாலும் கூட, சபைகளில் ஆட்சியமைப்பதிலே பல கஷ்டங்களை எதிர்கொண்டோம். அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போன்ற பேரினவாதக் கட்சிகள் மற்றும் ஒட்டுக் குழுக்களாக இருந்து அரசியல் கட்சிகளாக மாறியவர்களுடைய ஆதரவில்லாமல் சபைகளை அமைக்க முடியாமல் போனது.
இந்நிலையில் நாங்கள் தற்போது எடுத்திருக்கும் முடிவினடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியான நாங்கள் வீட்டுச் சின்னத்திலே போட்டியிட்டால், வடக்கு – கிழக்குப் பிரதேசத்திலே அதிகூடியளவு வட்டாரங்களை நாங்கள் வெல்லக் கூடியதாக இருக்கும். அதேபோல் எமது பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் போன்ற கட்சியினர் எவ்வாறு தேர்தலுக்கு முகங் கொடுக்கப் போகிறார்கள் என்பதை இன்னும் சரியாக அறிய முடியவில்லை.
அவர்கள் தனித்தனியாகவோ அல்லது அவர்கள் சேர்ந்த கூட்டாகவோ இன்னொரு வேட்பாளரை நிறுத்தும் போது நிட்சயமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு கிடைக்காத வட்டாரங்கள் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது.
இவ்வாறாகத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் எங்களுடைய விருப்பம் நாங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக ஒற்றுமையாக மீண்டும் வெற்றி பெற்ற வட்டாரங்களிலே அவர்களும் நாங்களுமாகச் சேர்ந்து வடக்குக் – கிழக்கிலுள்ள எல்லாச் சபைகளிலும் ஆட்சியமைக்கக் கூடிய சூழல் உருவாகும்.
அவ்வாறு வரும்போது நாங்கள் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, மொட்டுக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெறவேண்டிய அவசியமேற்படாது.
இவ்வாறான நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலே போட்டியிட்டவர்களும், ரெலோ, புளொட் கட்சிகளிலிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களும் இணைந்து ஆட்சியமைக்க முடியும் என்பதே எனது விருப்பமாகும். அவ்வாறு நிட்சமாக நடக்கும். அதற்குப் பங்காளிக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நாம் பிரிக்கவில்லை. மாறாக வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ரீதியான கருத்து என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நாம் எக்காலத்திலும் பிரிப்பதற்குச் சிந்திக்கவில்லை. இத்தொழில்நுட்ப ரீதியான கருத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் விமர்சிக்கவில்லை.
மாறாக வெளியிலுள்ளோரே விமர்சிக்கின்றனர். முகநூலில் வெளிவருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். அவர்கள் புத்திசாலிகள். ஆராய்ந்து உரிய முடிவை எடுப்பார்கள்.
தேர்தல் ஆணைக்குழுவால் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள அரசியல் கட்சி என்ற வகையில் நாங்கள் வட்டார ரீதியாக வேட்பாளர்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் 113 வட்டாரங்களில் 100 வட்டாரங்களுக்கு மேல் பெற்றிருந்தோம்.
இதேவேளை இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும்படியும், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது” என்றார்.