குழந்தைகள் மத்தியில் டெங்கு நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 40 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுக்கு அனுப்பி சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோரிடம் அவர் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நோய் அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை பாடசாலைகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பெற்றோர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை மிகவும் கடினமான நிலையை அடைந்த பின்னர் வைத்தியசாலையில் சேர்ப்பது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.