ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை எடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறிருக்கையில் கட்டுப்பணம் பெறுவதை நிறுத்துவதற்கு அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நடைமுறைப்படுத்த முற்பட்டமை சட்டத்திற்கு முரணான செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு ஜனநாயகத்தை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆயிரத்து 900 பில்லியன் ரூபாய் செலவில் செலவில் ஏன் தேர்தலுக்கான 10 பில்லியன் ரூபாயினை வழங்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் வரிப்பணத்தில் செலவுகளை செய்யும் அரசாங்கம், அவர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்க வேண்டும் எனவும் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.