ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய-ஈரானிய இரட்டைப் பிரஜையான அலிரேசா அக்பரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட திகதியை குறிப்பிடாமல், அலிரேசா அக்பரி தூக்கிலிடப்பட்டதாக ஈரானிய நீதித்துறையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மிசான் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் அக்பரியின் காணொளியை ஈரான் வெளியிட்டது. ஈரானின் உளவுத்துறை அமைச்சகம், அக்பரி ஈரானில் உள்ள பிரித்தானிய உளவுத்துறையின் மிக முக்கியமான முகவர்களில் ஒருவர்’ என்று கூறியது.
அக்பரியின் குடும்பத்தினர் புதன்கிழமை இறுதி வருகைக்காக சிறைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் மற்றும் அவர் தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்டதாக அவரது மனைவி கூறினார்.
முன்னாள் துணை ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் 2019இல் கைது செய்யப்பட்டார் மற்றும் பிரித்தானியாவிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார். எனினும், அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.
முன்னதாக, மரணதண்டனையை நிறுத்தி, அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஈரானிடம் பிரித்தானியா வலியுறுத்தியது.
பிரித்தானிய வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லி, மரண தண்டனையை மனித வாழ்க்கையை முற்றிலும் அலட்சியம் செய்யும் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியின் அரசியல் உந்துதல் செயல் என்று கடுமையாக விமர்சித்தார்.
அத்துடன் பிபிசி ஊடகம், ஒக்டோபரில் அக்பரியிடம் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் ஒலிப்பதிவொன்றை வெளியிட்டது. அதில், அவர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தான் செய்யாத குற்றங்களை கேமராவில் ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
அக்பரியை தூக்கிலிடக் கூடாது என்று ஈரானுக்கான கோரிக்கைகளுடன் அமெரிக்காவும் இணைந்தது. அமெரிக்க இராஜதந்திரி வேதாந்த் படேல் அவரது மரணதண்டனை மனசாட்சிக்கு விரோதமானது என்று கூறினார்.
படேல், அலிரேசா அக்பரி மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது தண்டனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறினார்.