தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தின் மிடில்டன் பிரிவில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 7 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
மேலும், 5 வீடுகள் பகுதியளவில் சேதமமைந்துள்ளது. இதனால் 12 குடும்பங்களை சேர்ந்த 49 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர்.
குறித்த லயன் குடியிருப்பில் நேற்றிரவு திடீரென தீ விபத்த ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியில் வந்தனர்.
அதற்குள் தீ வேகமாக பரவியது. பரவிய தீயை அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள், தலவாக்கலை பொலிஸாருடன் இணைந்து சுமார் மூன்று மணித்தியாலயங்களுக்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது வீடுகளில் வசித்த பெருந்தொகையானோர் தோட்டத்தில் நடைபெற்ற தைப் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்ததால் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த தீயினால் தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட உடமைகளும், வீடுகளில் வசித்த பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
தீயினால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களில் 3 குடும்பங்கள் மாத்திரம் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 9 குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளதாக தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி மற்றும் பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கும் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.