உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தடையாக இருக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் 61 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய எதிர்க்கட்சிகள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் மற்றொரு முயற்சி என குறிப்பிட்டு இந்த சட்டமூலத்தினை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன விமர்சித்திருந்தன.
குறித்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தலுக்கு சட்டமூலத்தை பிரயோகிக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தத்தை ஏற்க அரசாங்கம் மறுத்துவிட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.