ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபைக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று(வியாழக்கிழமை) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவிற்கு அழைப்பு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு பேர் கொண்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையில், ஏனைய மூவரும் ஜனாதிபதியின் அழைப்பிற்கமைய, குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இம்மாதம் முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அந்த பிரேரணையை நடைமுறைப்படுத்த முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எழுத்து மூலம் அமைச்சரவை செயலாளருக்கு அறிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஜனாதிபதி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில், இன்று பிற்பகல் 2 மணிக்கு, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, அதன் உறுப்பினர்களை அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.