தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன், சேத விபரங்களையும் கேட்டறிந்ததோடு மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தோட்ட நிர்வாகத்துக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 07 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ள நிலையில் 05 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது