பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணத்துக்கு வந்த ரணில் விக்ரமசிங்க நல்லூர் துர்கா மணிமண்டபத்தில் ஆற்றிய உரையில் 13வது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறிய சில நாட்களின் பின் கொழும்புக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதனை இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக வலியுறுத்தி கூறினார்.கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக அதுதான் காணப்படுகிறது.
இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டது 13ஆவது திருத்தம். இந்திய இலங்கை உடன்படிக்கையில் கையெழுத்திட்டது இந்தியாவும் இலங்கையும்தான்.எனவே அந்த உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு கேட்பதற்கு இந்தியாவுக்கு உரிமை உண்டு.இந்தியா இனப்பிரச்சினையில் தலையிடுவதற்கு இருக்கின்ற ஒரே வாசலும் அதுதான். தவிர இலங்கைத்தீவில் இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்காக இந்தியா இச்சிறிய தீவின்மீது தன் மேலாண்மையை சட்டபூர்வமாக பிரயோகிக்கக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருக்கும் ஒரே உடன்படிக்கையான இந்திய இலங்கை உடன்படிக்கையின் மிஞ்சி இருக்கும் ஒரே பகுதி 13 வது திருத்தம்தான்.எனவே இனப்பிரச்சினையில் இந்தியா தலையிடுவது என்று சொன்னால்,13 வது திருத்தத்தை முன்வைத்துத்தான் தலையிடும்.
ஆனால் இந்த தர்க்கம் எங்கே பிழைக்கின்றது என்றால், கடந்த 13 ஆண்டுகளாக இந்தியா ஏன் அந்த உரிமையை நிலைநாட்டவில்லை? என்பதில்தான். 13 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்பட்டு கொண்டிருந்தது. எனவே அந்த இயக்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் 13ஐ அமுல்படுத்துவதில் தடைகள் உண்டு என்று கொழும்பில் உள்ள அரசாங்கங்கள் சொன்னதை இந்தியாவும் உட்பட எனையு நாடுகள் ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலைமை இருந்தது. ஆனால் 2009க்கு பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முடியாமல் போனமைக்கு யார் பொறுப்பு? நிச்சயமாக தமிழ்த் தரப்பு அல்ல.இப்பொழுது 13-வது திருத்தத்தை அடியிலிருந்து நுனிவரை எதிர்க்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த பொதுத் தேர்தலில்தான் இரண்டு ஆசனங்களை வென்றது. அது ஒரு சிறிய தொகை.ஏனைய 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏதோ ஒரு விதத்தில் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றுதான் கேட்கின்றார்கள். குறிப்பாக இந்தியாவுக்கு கடிதம் எழுதிய கட்சிகளும் அதைக் கேட்டன.அதைவிட முக்கியமாக அண்மையில் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபொழுது அப்பேச்சுவார்த்தைக்குரிய அடிப்படைகளாக வகுக்கப்பட்ட மூன்று விடயங்களில் 13ஆவது திருத்தம் உட்பட யாப்பில்,சட்டத்தில் உள்ளதை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை உண்டு.
எனவே 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழ்த் தரப்பில் ஒப்பீட்டளவில் பலவீனமான எதிர்ப்புதான் உண்டு. அப்படியென்றால் இந்தியா அதை ஏன் இதுவரை செய்யவில்லை? கடந்த 13 ஆண்டுகளாக அதுதொடர்பில் இலங்கை மீது ஏன் இந்தியா அழுத்தங்களை பிரயோகித்திருக்கவில்லை?
13 என்ன 13 ? இந்தியா இலங்கைத் தீவில் கடந்த 13 ஆண்டுகளாக தான் விரும்பி கேட்டவற்றுள் பெற்றுக் கொண்டவை எத்தனை? கடந்த ஆண்டின் தொடக்கம் வரையிலும் இலங்கை இந்தியாவுக்கு ஒப்புக்கொண்ட பல விடயங்களை நிறைவேற்றியிருக்கவில்லை.பொருளாதார நெருக்கடிதான் இலங்கை அரசாங்கத்தை இந்தியாவிடம் மண்டியிட வைத்தது.கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு உடனடியாகவும் அதிகமாகவும் உதவிய நாடு இந்தியாதான். அதிலிருந்து இந்தியா தனது பிடியைப் படிப்படியாக பலப்படுத்தி வருகிறது. தனக்குச் சாதகமான சில உடன்படிக்கைகளையும் செய்து கொண்டு விட்டது. கடந்த ஆண்டை இந்தியாவுக்குச் சாதகமாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில விடயங்களை செய்து முடித்த ஒரு ஆண்டாகச் செல்லலாம். உதாரணமாக திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் விவகாரம், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையமா? மேற்கு முனையமா? என்ற விவகாரம், யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் உருவாக்கப்படவிருக்கும் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்கள், கடல் சார் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான எம்.ஆர்.சி.சி என்று அழைக்கப்படும் உடன்படிக்கை,பலாலி விமான நிலையத்தை மீளத் திறந்தமை, காங்கேசன் துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே ஒரு படகுப் போக்குவரத்துக்கு ஒப்புக்கொண்டமை, யாழ்ப்பாணத்தில் இந்தியாவால் கட்டப்பட்ட கலாச்சார மண்டபத்தை நிர்வகிப்பதற்கு இரண்டு கொமிற்றிகளை உருவாக்கியமை….போன்ற பல விடயங்களை இவ்வாறு சுட்டிக்காட்டலாம்.
இவ்வாறாக ஒப்பீட்டளவில் இலங்கை அரசாங்கம் இந்தியாவை நோக்கி அதிகம் பணிந்து போன ஆண்டுகளில் ஒன்றாக கடந்த ஆண்டு காணப்படுகிறது. எனினும் தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவை இந்தியா விருப்பத்தோடு பார்க்கவில்லை.அதனால் இந்தியாவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நெருடலான இடைவெளி ஒன்று உண்டு என்று அவதானிக்கப்பட்டது.ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதியை இந்திய அரசாங்கம் வழங்கியிருக்கிறது. அதாவது ரணில் விக்ரமசிங்க இந்தியாவை நோக்கிச் சுதாகரிக்கத் தொடங்கிவிட்டார் என்று பொருள்.
அவர் ராஜபக்சகளைப் போல இந்தியாவை நோக்கி அதிக மண்டியிட வேண்டிய தேவை கிடையாது. இந்தியாவை, சீனாவை, அமெரிக்காவை எல்லாரையுமே சம தூரத்தில் வைத்திருக்கும் அளவுக்கு அவர் புத்திசாலி. ராஜபக்சக்களைப் போல போர்க் குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ஒரு முன்னணித் தலைவராக அவர் இல்லை. அதனால் எந்தவோர் உலகப் பேரரசை நோக்கியும் அவர் அளவுக்கு மிஞ்சிச் சாயவில்லை. இதுதான் அவருடைய பலம். இந்த பலங் காரணமாகத்தான் அவர் பதவிக்கு வருவதை இந்தியா விரும்பவில்லையா என்ற சந்தேகங்களும் உண்டு. எனினும் இப்பொழுது அவர் இந்தியாவோடு இணக்கமாக வரத்தொடங்கி விட்டார் என்று தெரிகிறது.
இவ்வாறான ஒரு வெளியுறவுச் சூழலில்தான் அவர் கடந்த வாரம் பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் வைத்து 13ஆவது திருத்தத்தைப்பற்றிப் பேசியிருக்கிறார். அதன்பின் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்க் கட்சிகளை சந்தித்த ஜெய்சங்கர் 13ஆவது திருத்தத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். கஜேந்திரகுமார் பதிமூன்றை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கு காரணத்தைக் கூறியுள்ளார்.
இச்சந்திப்பின்போது ஜெய்சங்கர் “தீர்வைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதே தீர்வு ஆகிவிடாது” என்று சுட்டிக் காட்டியிருக்கிறார். ஒரு பிராந்தியப் பேரரசின் வெளியுறவு அமைச்சர் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை நோக்கி அவ்வாறு கூறும் அளவுக்குத்தான் தமிழ் மக்களின் அரசியல் காணப்படுகிறது. தீர்வு வேண்டும், இதுதான் தீர்வு என்று கூறுவது மட்டும் தீர்வாகிவிடாது. அந்த தீர்வை நோக்கி உழைக்க வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக அவ்வாறு தம்முடைய தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த தமிழ் கட்சிகள் அதற்காக என்னென்ன தியாகங்களைச் செய்திருக்கின்றன என்று தமிழ் மக்களுக்குத் தொகுத்துக் காட்ட முடியுமா? இல்லை. கொழும்பிடமோ அல்லது இந்தியாவிடமோ அல்லது ஐநாவிடமோ அமெரிக்காவிடமோ இதுதான் நமது தீர்வு என்று கூறி அதற்காக பேரம் பேசுவதற்கு ஒரு பேர பலம் வேண்டும்.அந்த பலத்தை எப்படிப் பெறுவது? குறிப்பாக தேர்தல் மைய அரசியலுக்கும் அப்பால் அந்த பலத்தை எப்படி பெறுவது? அதற்கான வழி வரைபடம் என்ன? தமிழ் கட்சிகளிடம் அதற்கான வழி வரைபடம் உண்டா? இல்லை.
இந்த வெற்றிடத்தில்தான் ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தத்தை ஒரு தந்திரமான தீர்வாக முன்வைக்கின்றார்.அதன்மூலம் அவர் இந்தியாவையும் அணைத்துக்கொள்ள முடியும். இந்தியாவையும் தமிழ் மக்களையும் மோத விடவும் முடியும்.
அவர் அரசுடைய பெரிய இனத்தின் தலைவர்.ஒரு அரசுடைய இனம் எல்லாவிதமான வளங்களையும் கொண்டிருக்கும். எல்லாவற்றிற்கும் அவர்களிடம் கட்டமைப்புகள் இருக்கும். அந்த கட்டமைப்புகளுக்கு ஊடாக அவர்கள் வெளியுறவுகளை கையாள்வார்கள். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவு பலமானது. அந்த அடிப்படையில்தான் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் தனக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து வருகிறார். பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான முன் நிபந்தனையின்படி கடனை மீளக்கட்டமைக்க வேண்டும். அதற்கு சீனா இன்றுவரை தயாரில்லை. ஆனால் இந்தியா அண்மையில் தயார் என்று அறிவித்து விட்டது. அதன்மூலம் இந்தியா கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தை மேலும் தன் பிடிக்குள் கொண்டுவர முயற்சிக்கும். இவ்வாறு புதுடில்லியும் கொழும்பும் நெருங்கத் தொடங்கினால் அது தமிழ் மக்களைப் பொறுத்தவரை எத்தகைய விளைவுகளைத் தரும்? அரசில்லாத தரப்பாகிய தமிழ் மக்கள் இந்த உள்நாட்டு மற்றும் பிராந்தியச் சூழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?