தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தங்களது கட்சி சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் கூட்டணியாகவும் போட்டியிடுவது தொடர்பில் விமர்சனங்கள் வெளிவருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளித்து நேரத்தை வீணாக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றி தொடர்பிலேயே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் பிரசாரங்களை உரிய வகையில் முன்னெடுக்குமாறும், வன்முறைகள் தலைதூக்கும் செயல்களுக்கு ஆதரவு வழங்காதீர்கள் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வன்முறையாளர்களைச் சமூகத்தில் இருந்து நாம் ஒதுக்கிவைக்க வேண்டும் எனவும், ஜனநாயகவாதிகளுக்கு இந்த நாட்டில் என்றும் மதிப்பு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.