உள்ளுராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை, போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, சுயேச்சைக் குழுக்கள், கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போன்றவை தேர்தல் திகதியினை வெளியிடும் வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் திகதியை முடிவு செய்ய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தற்போதுள்ள புதிய தொழில்நுட்பத்தின் படி ஜூம், ஸ்கைப் போன்றவற்றின் மூலம் குறித்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரியினை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் திகதியை அறிவிப்பது தொடர்பான வர்த்தமானி டைக்கப்பெற்றதன் பின்னர் எதிர்வரும் நாட்களில் அச்சிடப்படும் என அரசாங்க அச்சக அதிகாரி கங்கனி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், தேர்தல் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் திகதியை ஊடகங்களுக்கு அறிவிப்பது அல்ல, வர்த்தமானி மூலம் அறிவிப்பதே சட்டம் எனவும் மஹாநாம ஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.