பொருளாதார பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமெனில், மக்களிடையே முதலில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
இன்னொரு தரப்பினர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட கதிரையின் பாரத்தை சுமக்கும் அளவுக்கு எமது தலைவர்களின் மனதளவில் வலிமையானவர்கள் கிடையாது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாத, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி தாவ முடியாத, அமைச்சர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்திய, மனித உரிமையை வலுப்படுத்தக்கூடிய, சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு முழு உரிமையுடன் வாழக்கூடிய புதிய அரசியலமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டே ஆக வேண்டும்.
ஒரு நாடு வளமடைய வேண்டமெனில் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
ஆனால், இன்று எமது நாட்டிலோ பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் பணம் இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டமும் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இப்படியாக ஒரு நாட்டினால் ஒருபோதும் முன்னேற முடியாது. நீதிமன்றக் கட்டமைப்புக்களை வலுப்படுத்த வேண்டும்.
நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இல்லாது போனால், மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவிடும். இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
இன்று உலக நாடுகளாகட்டும், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களாகட்டும், அனைத்துமே இலங்கை தொடர்பாக அதிருப்தியையே வெளிப்படுத்தியுள்ளன.
சிங்கள- தமிழ்- முஸ்லிம். பரங்கியர் என அனைவரும் சமாதானமாக வாழ வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.
மொழி, மத உரிமை முழுமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாக மாற வேண்டும். மக்களிடத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்தாமல், எம்மால் ஒருபோதும் பொருளாதாரத்தையோ நாட்டையோ முன்னேற்ற முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.