நாம் இன்று ஒரு பொருளாதார யுத்தத்தை எதிர்நோக்கி உள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாம் இன்று ஒரு பொருளாதார யுத்தத்தை எதிர்நோக்கி உள்ளோம். இந்த யுத்தம் வடக்கு கிழக்கு யுத்தத்தை விட ஒரு தீர்க்கமான யுத்தமாகும்.
வடக்கு கிழக்கு மோதலில் இனங்கள் பிளவுபட்டன. ஆயினும் இந்த யுத்தத்தில் அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டியுள்ளது.
பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் வழி விடுவோமாயின் இப்பொருளாதார யுத்தத்தில் நாம் தோல்வியடைவோம். அவ்வாறு இடம்பெறுமாயின் சில அரசியல் கட்சிகள் கூறுவது போன்றதொரு கற்பனை உலகம் எமக்கு உரித்தாகாது.
நாம் பொருளாதார காலணித்துவத்திற்கு உட்படுவோம். ஆகவே நாம் அனைவரதும் பொறுப்பு யாதெனில் துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு இப் பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குதல் ஆகும்.
பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்வதற்கும் அதன் பின்னர் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் ஒன்றை எமது நாட்டில் உருவாக்குவதற்கும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் சமாதானமும் முக்கியமானதாகும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.