நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தொழில்நுட்பம் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து கண்காணிப்பு கெமராக்களையும் அதன் வசதிகளில் இருந்து அகற்ற அவுஸ்ரேலியாவின் வெளியுறவு அமைச்சகம், முடிவு செய்துள்ளது.
தனது துறை அலுவலகங்களில் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கெமராக்கள் அகற்றப்படும் என வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இன்று (வெள்ளிக்கிழமை) மாநில ஒளிபரப்பு ஏபிசியிடம் கூறினார்.
முன்னதாக, 250க்கும் மேற்பட்ட அவுஸ்ரேலிய அரசாங்க கட்டடங்களில் குறைந்தபட்சம் 913 கெமராக்கள் நிறுவப்பட்டிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புத் தளங்களில் இருந்து சீனத் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கெமராக்களை அகற்ற உத்தரவிட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை தடை செய்வதற்கான முடிவினால், மோசமடைந்த இராஜதந்திர உறவுகளை சீர்படுத்த இரு நாடுகளும் முயற்சி செய்தன.
அமெரிக்கா ஏற்கனவே பல சீன விற்பனையாளர்கள் மற்றும் கண்காணிப்பு தயாரிப்புகளை தடை செய்துள்ளது. மேலும் பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி சீன- இணைக்கப்பட்ட கண்காணிப்பு கெமராக்களை முக்கியமான கட்டடங்களில் நிறுவுவதை நிறுத்துமாறு நவம்பர் மாதம் பிரித்தானியா, அரசாங்கத் துறைகளுக்குத் தெரிவித்தது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், அவுஸ்ரேலியாவின் நடவடிக்கைக்கு பதிலளித்துள்ளார். ‘சீன நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை சீனா எதிர்க்கிறது’ என கூறினார்.