இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணி, இன்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டநேர முடிவில் ரவீந்திர ஜடேஜா 66 ஓட்டங்களுடனும் அக்ஸர் பட்டேல் 52 ஓட்டங்களுடனும்; களத்தில் இருந்தனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்திய அணி 144 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
நாக்பூரில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 177 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லபுஸ்சேகன் 49 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெர்ரி 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, இன்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 120 ஓட்டங்களையும் ஜடேஜா ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் அக்ஸர் பட்டேல் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அறிமுக சுழற்பந்து வீச்சாளரான டொட் மர்பி 5 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் மற்றும் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் 3 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை நாளை இந்திய அணி, தொடரவுள்ளது.