துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உயிர்காக்கும் நிவாரணமாக, 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட மனிதாபிமான உதவி நிறுவனம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்த நிதியுதவி தங்குமிடம், குளிர் காலநிலை விநியோகம், உணவு, தண்ணீர் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் என சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முவரகம், தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள நாடுகள், துருக்கி மற்றும் சிரியாவிற்கு தேடல் குழுக்கள் மற்றும் உதவிகளை அனுப்பி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முவரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தூய்மையான மற்றும் சுகாதார உதவிகளையும் வழங்குகிறோம்’ என குறிப்பிட்டுள்ளது.
முகவரகத்தின் இயக்குனர் சமந்தா பவர், ஏற்கனவே பேரிடர் உதவி மீட்புக் குழுவை நியமித்துள்ளார், இது தற்போது துருக்கிய நகரங்களான அதியமான், அதானா மற்றும் அங்காராவில் இருந்து செயற்பட்டு வருகிறது.
பேரிடர் மீட்பு நிபுணர்கள், 159 தேடல் மற்றும் மீட்பு பணியாளர்கள் மற்றும் 12 நாய்கள் உட்பட சுமார் 200 பேர் இந்த குழுவில் உள்ளனர். இந்த குழு இடிபாடுகளை நகர்த்தக்கூடிய இயந்திரங்கள் உட்பட சுமார் 170,000 பவுண்டுகள் உபகரணங்களை கொண்டு வந்துள்ளது.