அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 132 ஓட்டங்களால் இன்னிங்ஸ் வெற்றியை பதிவுசெய்துள்ளது.
நாக்பூரில் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 177 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லபுஸ்சேகன் 49 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெர்ரி 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 400 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 120 ஓட்டங்களையும் அக்ஸர் பட்டேல் 84 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அறிமுக சுழற்பந்து வீச்சாளரான டொட் மர்பி 7 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் லியோன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 233 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலிய அணி, 91 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரவிசந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக 7 விக்கெட்டுகளையும் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட ஜடேஜா தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 17ஆம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ளது.