மகளிர் ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
கேப் டவுணில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குழு ஏ பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை மகளிர் அணியும் பங்களாதேஷ் மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சோபனா மோஸ்தரி 29 ஓட்டங்களையும் நிகர் சுல்தானா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், ஒஷேதி ரணசிங்க 3 விக்கெட்டுகளையும் சமரி அத்தபத்து 2 விக்கெட்டுகளையும் ரணவீர 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 127 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்ஷித்த மாதவி ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் நிலக்ஷி டி சில்வா ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மருஃபா அக்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 50 பந்துகளில் ஒரு சிக்ஸர் 8 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹர்ஷித்த மாதவி தெரிவுசெய்யப்பட்டார்.