கரீபியன் தேசமான ஹெய்டிக்கு போர்க் கப்பல்களை அனுப்ப கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை, வன்முறை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்டியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட கனடா கடற்படைக் கப்பல்கள் அங்கு விரையவுள்ளன.
பஹாமாஸில் நடந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட கரீபியன் வர்த்தகத் தொகுதியான காரிகோம் கூட்டத்தின் போது, பிரதமர் ஜஸ்டின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
எனினும். கனேடிய பிரதமர், எத்தனை கப்பல்கள் இந்த முயற்சியில் பங்கேற்கும் அல்லது அவர்களின் பணியின் கால அளவைக் குறிப்பிடவில்லை.
நாட்டில் செயல்படும் சக்திவாய்ந்த ஆயுத கும்பல், கொலை, கடத்தல்கள் மற்றும் பாலியல் வன்முறை பற்றிய பரவலான விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ட்ரூடோ, ‘ஹெய்டி இடைவிடாத கும்பல் வன்முறை, அரசியல் கொந்தளிப்பு மற்றும் ஊழலை எதிர்கொள்கிறது எனவும் இந்த சூழ்நிலையின் தீவிரத்தை எதிர்கொள்ள ஒன்றாக வர வேண்டிய தருணம் இதுவெனவும் குறிப்பிட்டார்.
பிரதமர் ஏரியல் ஹென்றி உள்ளிட்ட ஹெய்டி தலைவர்கள், முன்னர் அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த சர்வதேச சமூகத்திடம் இராணுவ உதவியைக் கோரியுள்ளனர்.
ஆனால், சில ஹெய்டியர்கள் அந்த அழைப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர், அவர்கள், ஹெய்டியின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றை வெளிநாட்டு தலையீட்டுடன் மேற்கோள் காட்டியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், சர்வதேச படைக்கு அழைப்பு விடுத்தார்.
ஜூலை 2021இல் ஹெய்டியின் முன்னாள் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து ஹெய்டியின் குற்றக்கும்பல்கள், தங்கள் சக்தியை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. டிசம்பரில் போர்ட்-ஓ-பிரின்ஸின் தலைநகரில் 60 சதவீதம் கும்பல் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஐ.நா. மதிப்பிட்டது.