பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, வரும் இந்தியா, உலக அரங்கில் முக்கியமான கட்டமைப்பான ஜி-20க்கு தலைமை வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் உலகளாவிய தீர்வு குறித்த பங்களிப்பிற்கு ஜி-20 தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
ஜி-20 என்பது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தினையும், உலகளாவிய வர்த்தகத்தில் 75சதவீதத்தினையும் மற்றும் உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினையும் குறிக்கும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை கட்டமைப்பாகும்.
இத்தகைய நிலையில் ஜி-20இன் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள இந்தியா நாடு முழுவதும், 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தவதற்கு திட்டமிட்டு அதனை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் ஜி-20 இல் உள்ள 20 நாடுகளை சேர்ந்த உலக பிரதிநிதிகள் பங்கேற்ற தொடக்க நிலை மாநாடு புதுச்சேரியில் நடைபெற்றிருந்தது.
ஜனவரி 30ஆம் திகதி சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றதோடு, ஐநா பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அதனையடுத்து, இந்தியாவின் ஜி-20 தலைமையின்கீழ், ஜி-20 வேளாண் பிரதிநிதிகளின் மூன்று நாள் கூட்டம், இந்தூரில் நடைபெற்றிருந்தது.
இதன்போது, ஜி-20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 90 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக உணவுப் பாதுகாப்பு என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. 2000ஆம் ஆண்டில் 192 மில்லியன் டன்னாக இருந்த உலக உணவு தானிய தேவை, 2030ஆம் ஆண்டில் 345 மில்லியன் தொன்னாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் உள்ள விளை நிலங்களில் 12 சதவீதம் மட்டுமே விவசாயத்திற்கு ஏற்றவையாக உள்ளன. நிலமோ, இயற்கை வளமோ தற்போது உள்ளதைவிட அதிகரிக்கப் போவதில்லை.
இவ்வாறான நிலையில், உள்நாட்டு உற்பத்தியை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டு இந்தியா வழிவரைபடமொன்றை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
இதேநேரம், உலகளாவிய ரீதியில் கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு உதவும் திட்டத்தை அடுத்த வாரம் நடைபெறும் ஜி20 கூட்டத்தில் இந்தியா முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் பெங்களூருவில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் முன்வைப்பதற்கான ஒரு திட்ட வரைவை இந்தியா தயாரித்துள்ள நிலையில் அத்திட்டம், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகளுக்கு வழங்கியுள்ள கடன் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும் என சீனா உள்ளிட்ட பணக்கார நாடுகளை வலியுறுத்தும் வகையில் அமையவுள்ளது.
இதன்மூலம் நெருக்கடியில் சிக்கியுள்ள அனைத்து நாடுகளின் குரலாக இந்தியா செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில், பொருளாதார திறன், எதிர்கால திட்டமிடல், பிற நாடுகளுக்குப் பொருளாதார உதவி, பாதுகாப்பு, செல்வாக்கு இவற்றின் அடிப்படையில் உலகில் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 4ஆவது இடத்தில் இருக்கிறது.
இந்தியா, கொரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளைக் கடந்து பொருளாதார முன்னேற்றம் அடைந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இவ்வாறான நிலையில் ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ள இந்தியா நிச்சயமாக உலகத்தினை திரும்பிப் பார்க்கச் செய்யும்.