16ஆவது ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடருக்கான முன்னெற்பாடுகளை, ஒவ்வொரு அணி நிர்வாகமும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், டெல்லி கெபிடல்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகளின் புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராக அவுஸ்ரேலியாவின் டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் இந்திய அணிக்கெதிரான டெஸ்;ட் தொடரின் எஞ்சிய இரு போட்டிகளில், உபாதைக்காரமாக விலகியுள்ள வோர்னர், டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளார்.
இந்த நிலையில், டெல்லி அணியின் முன்னாள் தலைவர் ரிஷப் பந்துக்கு பதிலாக, வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பந்த், கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததற்கு சிகிச்சை பெற்றுவருகின்றார் என்பது நினைவுக்கூறத்தக்கது.
வோர்னர் இதற்கு முன்னதாக சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது, 2016ஆம் ஆண்டு அந்த அணிக்கு சம்பியன் கிண்ணத்தை வென்றுக்கொடுத்தார்.
இதேபோல, சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக தென்னாபிரிக்காவின் ஹெய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடிவரும் ஹெய்டன் மார்க்ரம், சமீபத்தில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற எஸ்.ஏ.20 தொடரில், மார்க்ரம் தலைமையிலான சன்ரைசஸ் ஈஸ்டன் கேப் அணி முதல் சம்பியன் பட்டத்தை வென்றது.
சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் மற்றொரு அணியான, சன்ரைசஸ் ஈஸ்டன் கேப் அணி சம்பியன் பட்டம் வென்றதன் பின்னணியில், மார்க்ரமுக்கு இந்த தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி ஆரம்பமாகும் 16ஆவது ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடர், மே 28ஆம் திகதி வரை இரசிகர்களை கொண்டாட வைக்கவுள்ளது.