இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவது இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில், பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றிருந்தாலும் ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
சட்டாகிரோம் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 48.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சகிப் அல் ஹசன் 75 ஓட்டங்களையும் முஷ்டபிசுர் ரஹ்மான் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் 3 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன் மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ரெஹான் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 247 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 43.1 ஓவர்கள் நிறைவில் 196 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், பங்களாதேஷ் அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேம்ஸ் வின்ஸ் 38 ஓட்டங்களையும் பிலிப் சோல்ட் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், சகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும் தைஜூல் இஸ்லாம் மற்றும் எபொட் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஹ்மான் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 75 ஓட்டங்களையும் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சகிப் அல் ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.