உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெறும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின், ரவுண்ட்-16 இரண்டாவது லெக்கின் நான்கு முக்கிய போட்டிகள் நேற்று நடைபெற்றன.
இதன்படி, கடந்த இரண்டு தினங்களில் நடைபெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிட்டி, ரியல் மெட்ரிட் மற்றும் நபோலி அணிகள் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ரவுண்ட்-16 இரண்டாவது லெக்கில் நடைபெற்ற போட்டியில், மன்செஸ்டர் சிட்டி மற்றும் ஆர்.பி. லெய்ப்ஸிங் அணிகள் மோதின.
இப்போட்டியில், மன்செஸ்டர் சிட்டி அணி, 7-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில், 8-1 என்ற கோல்கள் கணக்கில் மன்செஸ்டர் சிட்டி அணி, வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இதேபோல போர்ட்டோ மற்றும் இன்டர் மிலான் அணிகள் மோதிய போட்டி, கோல் எதுவும் இல்லாமல் சமநிலையில் முடிவடைந்தது.
ஆனால் ஓட்டுமொத்த கோல்கள் அடிப்படையில், இன்டர் மிலான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.
ரவுண்ட்-16 இரண்டாவது லெக்கில் நடைபெற்ற போட்டியில், ரியல் மெட்ரிட் மற்றும் லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் ரியல் மெட்ரிட் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனடிப்படையில் ரியல் மெட்ரிட் அணி, ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் 6-2 என்ற கோல்கணக்கில் முன்னிலைப்பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.
நபோலி மற்றும் பிராங்பர்ட் அணிகள் மோதிய போட்டியில், நபோலி அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில், நபோலி அணி 5-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப்பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதிப் போட்டிகளுக்கான அணிகளின் குழு தேர்வு, நாளை, இடம்பெறவுள்ளது.