சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய விஜயத்தின் போது, உக்ரைனில் கடுமையான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஸி ஜின்பிங்கின் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக நேற்று ரஷ்யாவை வந்தடைந்தார். படையெடுப்புக்கு பிறகு ரஷ்யா வந்துள்ள சீன ஜனாதிபதிக்கு இதன்போது உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட போது, ஒருவரையொருவர் அன்புள்ள நண்பர் என்று அழைத்து தங்களது அன்பை வெளிப்படுத்திக்கொண்டனர். மேலும், பேச்சுவார்த்தை செயல்முறைக்கு தாங்கள் எப்போதும் தயாராக இருப்பதாக புடின் கூறினார்.
நீதியின் கொள்கைகளை கடைபிடிப்பதற்காக, ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பிற்கும் அழுத்தம் கொடுப்பதற்காக புடின், சீன ஜனாதிபதியை பாராட்டினார்.
பதிலுக்கு, ‘உங்கள் வலுவான தலைமையின் கீழ், ரஷ்யா அதன் செழிப்பான வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. ரஷ்ய மக்கள் தொடர்ந்து உங்களுக்கு உறுதியான ஆதரவை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்’என சீன ஜனாதிபதி புடினிடம் கூறினார்.
சீனா கடந்த மாதம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தை வெளியிட்டது. அதில் பகையை நிறுத்துதல் மற்றும் அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குதல் ஆகியவை அடங்கும்.
ஆனால், உக்ரைனிய பிரதேசத்தில் இருந்து ரஷ்யப் படைகளை அகற்றுவதை உள்ளடக்காத போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது ரஷ்ய வெற்றியை உறுதிப்படுத்துவதை திறம்பட ஆதரிப்பதாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.