கென்ய தலைநகரான நைரோபியின் மத்திய வணிக மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் கென்ய சந்தையில் சீன வணிகர்கள் ஊடுருவியதைக் கண்டித்து போராட்டங்களை நடத்தியதாக கென்யாவை தளமாகக் கொண்ட தி ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்ட டவுன்டவுன் மையங்களைச் சேர்ந்த கென்ய வர்த்தகர்கள், சீன வர்த்தகர்கள் தங்களை வணிகத்திலிருந்து வெளியேற்றிவிட்டதாகவும், குறைந்த விலையில் பொருட்களை விற்பதாக குற்றம் சாட்டினார்கள்.
ஜனாதிபதிஇ துணை ஜனாதிபதி அலுவலக்கள் உள்ள வீதிகள் மற்றும் பிற முக்கிய பாதைகளில் போராட்டங்களை நடத்த விடாமல், பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தியபோதும், அதனை மீறி வணிகர்கள் போராட்டப் பேரணியை முன்னெடுத்தனர்.
இலத்திரனியல் பொருட்களின் வர்த்தக முகவர் ஒருவர் தெரிவிக்கையில், ‘கென்ய சந்தையில் சீன வர்த்தகர்களின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன்.
வெளிநாட்டினர் ஒரே நேரத்தில் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் பாத்திரத்தை வகிக்கிறார்கள், அவ்வாறு இருக்கக்கூடாது.
கென்யாவில், அவர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள். அவர்கள் எங்களை வணிகத்திலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்றார்.
இந்த வார தொடக்கத்தில், கென்யாவின் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை அமைச்சரவை செயலாளர் மோசஸ் குரியா சீனா சதுக்கத்தை மூடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திகா சாலையில் உள்ள யூனிசிட்டி வளாகத்தில் தற்போது வர்த்தகம் செய்யும் சில்லறை விற்பனையாளருக்கான குத்தகையை வாங்கி உள்ளூர் வர்த்தகர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை அவர் முன்வைத்துள்ளதாக கென்ய அமைச்சரவை செயலாளர் தெரிவித்தார்.
கென்யாவில் சீன முதலீட்டாளர்கள் உற்பத்தியாளர்களாக வரவேற்கப்படுகிறார்கள், ஆனால் வர்த்தகர்கள் அல்ல என்று மோசஸ் குரியா சுட்டிக்காட்டியுள்ளார்.