யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆவிக்குரிய சபைப் போதகர் ஒருவரை பலாலி விமான நிலையத்தில் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் விசாரித்த பின் யாழ்ப்பாணத்துக்குள் வர அனுமதித்திருக்கிறார்கள். அவர் வியாபார விசாவில் வந்தபடியால் அதை மத நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதனால் குறிப்பிட்ட போதகர் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட அந்த மத நிகழ்ச்சியில் பங்குபற்றாமல் நாடு திரும்பிவிட்டார்.
இத்தனைக்கும் அவர் நேரடியாக இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை.கொழும்புக்கு வந்து அங்கே நான்கு நாட்கள் தங்கியிருந்த பின்னர்தான் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறார்.தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அவருக்கு வியாபார விசா வழங்கியிருக்கிறது. அவர் ஒரு மதபோதகர் இதற்கு முன்னரும் இதுபோன்று இலங்கைக்கு வந்திருக்கிறார். மதக் கூட்டங்களில் பங்குபற்றியிருக்கிறார். எனவே அவரை முதலில் தடுத்திருக்க வேண்டியது, அவருக்கு விசா வழங்கிய இலங்கைத் துணைத் தூதரகம்தான். ஆனால் விசாவை வழங்கிவிட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வைத்து நான்கு மணித்தியாலங்கள் விசாரித்து அவருடைய நடமாட்டத்திற்குள்ள வரையறைகளை உணர்த்தியிருக்கிறார்கள்.
இதற்கு முன்னரும் இது போன்ற மத நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.போதகர்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்திருக்கிறார்கள்.இம்முறை குறிப்பிட்ட போதகரை திருப்பி அனுப்பியதற்கு பிரதான காரணம் ஈழத்துச் சிவ சேனையின் முறைப்பாடுதான் என்று கருதப்படுகிறது.ஈழத்துச் சிவசேனை அப்போதகர் வருவதற்கு முன்னரே அவருக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுக்க தொடங்கிவிட்டது.அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அது தொடர்பாக முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணம் மானிப்பாயிலும் நடக்கவிருந்த இரண்டு கூட்டங்களுக்கு எதிராக அவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த முறைப்பாடுகளின் விளைவாகத்தான் மேற்படி நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் குறிப்பாக யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடக்கவிருந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டமைக்கு போதகர் பெற்றுக் கொண்ட விசா ஒரு காரணமாக கூறப்பட்டாலும், வெளிப்படையாக கூறப்படாத காரணம் ஈழத்துச் சிவ சேனையின் முறைப்பாடு என்று நம்பப்படுகிறது. ஆயின் அரசாங்கம் இது போன்ற இந்து அமைப்புகளின் முறைப்பாடுகளை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கின்றதா என்ற கேள்வி இங்கு எழும்.
ஆனால் குறிப்பிட்ட போதகர் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன் கொழும்பில் அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்திருக்கிறார்.ரணிலை அவர் ஆசீர்வதிக்கிறார். ரணில் அவருக்கு முன் அடக்க ஒடுக்கமாக நிற்கிறார். அந்த ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ரணில் விக்கிரமசிங்க அவருடைய மத நம்பிக்கைகளை பொறுத்தவரை புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ ஒழுக்கத்துக்கூடாக வளர்க்கப்பட்டவர். அவர் மேற்படி ஆவிக்குரிய சபை போதகரின் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டது வழமைக்கு மாறானது அல்ல.ஆனால் அதே போதகர் யாழ்ப்பாணத்தில் ஒரு மத நிகழ்ச்சியில் பங்கு பற்றவிடாது தடுக்கப்பட்டிருக்கிறார்.அரசாங்கம் ஈழத்துச் சிவ சேனையின் வேண்டுகோளை கவனத்திலெடுத்தே, அப்போதகர் மத நிகழ்வில் கலந்துகொள்வதை தடுத்துநிறுத்தியது என்பதனை வெளிப்படையாக சொல்லவில்லை.எனினும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இறுதியிலும் இறுதியாக ஈழத்துச் சிவசேனைக்கு சாதகமாகத்தான் முடிந்திருக்கின்றன. அதன்படி அரசாங்கம் ஈழத்துச் சிவ சேனைக்கு ஆதரவாக முடிவெடுத்ததா என்ற கேள்வி எழும்.
கடந்த சில வாரங்களாக நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து பார்த்தால் அரசாங்கம் ஈழத்து சிவசேனைக்கு ஆதரவாக முடிவெடுத்திருப்பதாகவே தோன்றும். ஆனால் அது ஒரு தோற்றம் மட்டுமே. உண்மை நிலை என்னவெனில் அரசாங்கம் சிங்கள பௌத்த அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப முடிவெடுத்திருக்கின்றது என்பதுதான்.
ஒருபுறம் ஜனாதிபதி மேற்படி போதகரை சந்திக்கிறார்.அவருக்கு முன் பணிவாக நிற்கிறார்.இன்னொருபுறம் அவருடைய அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் போதகரை விசாரிக்கிறார்கள்.ஒருபுறம் அரசாங்கம் ஈழத்துச் சிவசேனையின் கோரிக்கையை ஏற்றுப் போதகரை விசாரித்ததாக எடுத்துக் கொண்டால், இன்னொருபுறம் அதே அரசாங்கம் குருந்தூர் மலையில் ஒரு சிவன் கோவிலை ஆக்கிரமிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? அல்லது கச்சதீவில் புத்தர் சிலைகளை வைப்பதையும் அரச மரங்களை நடுவதையும் எப்படி எடுத்துக் கொள்வது?
அண்மையில் வலிகாமத்தில் அரச படைகளால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் சைவ ஆலயங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.இப்பொழுதும் உயர் பாதுகாப்பு வலையங்களில் பல இந்து கோவில்கள் பாழடைந்து கிடக்கின்றன. பேராசிரியை. சுஜாதா அருந்ததி மீகம போன்ற சிங்கள அறிஞர்கள் கூறுவதுபோல பொலநறுவையில் தொடக்கத்தில் 15 சிவ ஆலயங்களின் சிதைவுகள் காணப்பட்டன. ஆனால் இப்பொழுது அங்கே மூன்று சிவனாலயங்கள்தான் மிச்சமுள்ளன. இதுதான் இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தம் அல்லாத ஏனைய மரபுரிமைச சொத்துக்களின் நிலை.
இப்படிப்பட்டதோர் பின்னணியில், யில் சைவ ஆலயம் ஒன்றை ஆக்கிரமிக்கும் அதே அரசாங்கம் இன்னொகுருந்தூர் மலைரு புறம் ஈழத்துச் ஈழத்துச் சிவ சேனையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது என்று எடுத்துக் கொள்வது எவ்வளவு முரணானது?
அவ்வாறு ஈழத்துச் சிவ சேனையின் கோரிக்கைக்கு அமைவாகத்தான் மேற்படி போதகரின் மத நிகழ்ச்சி தடுக்கப்பட்டது என்று காட்டுவதன்மூலம் அரசாங்கம் ஈழத்துச் சிவ சேனைக்கும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் இடையே ஏற்கனவே உள்ள விரோதத்தை வளர்க்க முனைகிறதா?அதாவது அரசாங்கம் தமிழ் மக்களுக்கிடையே மத ரீதியான மோதல்களை மிகவும் தந்திரமான விதங்களில் ஊக்குவிக்கின்றது என்று பொருள்.தமிழ் மக்களை மதரீதியாக தங்களுக்கிடையே முரண்பட வைப்பதன்மூலம், தமிழ் மக்களின் தேசிய இருப்பை சிதைப்பது.
ஏற்கனவே கிழக்கில், வடக்குக் கிழக்கு இணைப்புக்கு எதிரான சக்திகளை தாமரை மொட்டுக் கட்சி தன்பக்கம் வசப்படுத்தி வைத்திருக்கிறது. இந்நிலையில் மதரீதியான முரண்பாடுகளைத் தூண்டி விடுவதன்மூலம் தமிழ் மக்களை மதத்தின் பெயராலும் பிரிக்கலாம் என்ற ஒரு நிகழ்ச்சி நிரல் அண்மை ஆண்டுகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமது கோரிக்கையை ஏற்றுத்தான் அரசாங்கம் கிறிஸ்தவ மத நிகழ்ச்சியை நிறுத்தியது என்று சிவசேனா பெருமைப்படுகிறதோ தெரியவில்லை. ஆனால் அழிக்கப்பட்ட சிவன் ஆலயங்களை மீட்டெடுப்பதற்கு சிவசேனையால் முடியவில்லை.குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கட்டப்பட்டுவரும் பௌத்த விகாரையை தடுத்துநிறுத்த ஈழத்துச் சிவ சேனையால் முடியவில்லை.விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டுமல்ல உயர் பாதுகாப்பு வளையங்களில் சிதைவடைந்த நிலையில் உள்ள இந்து கோவில்களை மீட்டெடுக்க சிவசேனையால் முடியவில்லை. ஆனால் சொந்தத் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஈழத்துச் சிவ சேனைக்கு வெற்றி கிடைக்கின்றது என்றால் அதன் பொருள் என்ன?
நாவற்குழியும் உட்பட தமிழ் பகுதிகளில் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக போராடும் தமிழ்த் தேசியவாதிகளோடு ஏன் சிவசேனை இணைந்து போராடுவதில்லை? ஞானசார தேரரை விடவும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை ஏன் சிவசேனை அதிகம் வெறுக்கின்றது? வடக்கு கிழக்கை இணைக்கக்கூடாது என்று கருதும் கிழக்கு மையக் கட்சிகளுக்கு வடக்கு ஒரு விரோதியாக தெரிகிறது. ஆனால் ராஜபக்சக்கள் விரோதிகளாகத் தெரியவில்லை. அதுபோலவே கிறிஸ்தவ மதப் பிரிவுகளுக்கு எதிராக செயல்படும் இந்து மத அமைப்புகளின் முக்கியஸ்தர்களுக்கு ஞானசார தேரர் எதிரியாக தெரியவில்லை.
இது எதைக் காட்டுகிறது? தமிழ்மக்களைச் சிதறடிக்க வேண்டும், அவர்களுடைய தேசிய ஐக்கியத்தை சிதைக்க வேண்டும், என்று கருதும் சக்திகளுக்கு தமிழ் மக்கள் மத்தியிலேயே நண்பர்கள் கிடைத்து வருகிறார்கள். நாடு வங்குரோத்தாகி, ஐ.எம்.எப் கடன் கொடுத்ததை பட்டாசு கொளுத்திக் கொண்டாடும் ஒரு காலகட்டத்தில் கூட, தமிழ் மக்களைச் சிதைக்க வேண்டும் என்று கருதும் சக்திகள் விறுவிறுப்பாக இயங்குவதைத்தான் இது காட்டுகின்றதா?