நேட்டோவின் 31ஆவது உறுப்பினராக பின்லாந்து செவ்வாய்கிழமை சேரும் என மேற்கத்திய இராணுவக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அறிவித்துள்ளார்.
‘நேட்டோ தலைமையகத்தில் நாங்கள் முதன்முறையாக ஃபின்னிஷ் கொடியை உயர்த்துவோம். இது ஃபின்லாந்தின் பாதுகாப்புக்கும், நார்டிக் பாதுகாப்புக்கும் மற்றும் ஒட்டுமொத்த நேட்டோவுக்கும் நல்ல நாளாக இருக்கும். இதன் விளைவாக சுவீடனும் பாதுகாப்பாக இருக்கும்’ என கூறினார்.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பால் அச்சமடைந்த பின்லாந்து, நேட்டோ உறுப்புரிமையை கோரியது.
ஆனால், துருக்கி, ஃபின்லாந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக புகார் கூறி விண்ணப்பத்தை தாமதப்படுத்தியது.
நேட்டோவின் சமீபத்திய வரலாற்றில் பின்லாந்தின் உறுப்புரிமை மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாகும்.
கடந்த மே மாதம் இதே நேரத்தில் நேட்டோவில் சேர சுவீடன் விண்ணப்பித்தது, ஆனால் இதே போன்ற புகார்கள் காரணமாக துருக்கி அதைத் தடுத்தது.
குர்திஷ் போராளிகளை அரவணைத்து ஸ்டாக்ஹோம் வீதி களில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிப்பதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
எந்தவொரு நேட்டோ விரிவாக்கத்திற்கும் அதன் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு தேவை.