அதிகரித்து வரும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் பல வருடங்களாக முன்னெடுத்த பிழையான கொள்கைத் தவறுகளுக்குப் பின்னர், சீர்திருத்தம் மற்றும் மீள்கட்டமைப்புக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஆகவே இலங்கைக்கு மிகவும் தேவையான தருணத்தில் அடுத்த நான்கு வருடத்திற்கு 3 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது என சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
கணிசமான வரி குறைப்புகள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களில் தாமதம் ஆகியவை பொருளாதார நெருக்கடிக்கு பங்களித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது என்றும் இந்த பிரச்சினைக்கு தீர்வைக் காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் அதேவேளை நலிவடைந்த நிலையில் உள்ள மக்களிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.