மஹிந்த ராஜபக்ஷவுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலை பிவித்துரு ஹெல உறுமய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில மறுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கை குறித்து மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வருடமாக தான் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்காத நிலையில் தானும் விமலும் சந்தித்ததாக வெளியாகிய இவ்வாறான செய்திகள் ஆதாரமற்றவை என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பொய்களை பரப்புவதன் மூலம் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
யுகடனவி ஒப்பந்தத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியதையடுத்து 2022 மார்ச் மாதம், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கம்மன்பில மற்றும் வீரவன்ச இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.