2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் 204 உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய 172 அபிவிருத்தித் திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் 21 அபிவிருத்தி திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குருவிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த மார்ச் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டன.
மேலும், பெல்மடுல்ல/கஹவத்தை அபிவிருத்தித் திட்டங்கள் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், ரம்புக்கன, குளியாபிட்டிய, தலாவ, கெக்கிராவ, வெலிமடை, பண்டாரவளை, வெல்லவாய, நாவலப்பிட்டி, குண்டசாலை, கம்பளை, வவுனியா, கிளிநொச்சி, அம்பலாங்கொட, மாத்தறை, கட்டான-சீதுவ, ஜா எல, வத்தளை-மாபோல, கம்பஹா ஆகிய அபிவிருத்தித் திட்டங்கள். இந்த ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளன.
அத்துடன், இவ்வருட இறுதிக்குள் நுவரெலியா மற்றும் அறுகம்பேயின் அபிவிருத்தித் திட்டங்கள் வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
2021-2022 இரண்டு ஆண்டுகளில், நகர அபிவிருத்தி அதிகாரசபை வர்த்தமானி மூலம் 32 அபிவிருத்தி திட்டங்களை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் 9 அபிவிருத்தி திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
கந்தளாய், தெஹிவளை-கல்கிஸ்ஸ, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, மஹரகம, ஹோமாகம, கஸ்பேவ, நுவரெலியா, தம்புள்ள, கொழும்பு அபிவிருத்தித் திட்டம் என்பன கடந்த வருடம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களாகும்.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நகர அபிவிருத்தி நிர்வாகப் பிரதேசமாக நியமிக்கப்படும் எந்தவொரு பிரதேசமும் நகர அபிவிருத்தித் திட்டத்திற்காக பயன்படுத்தப்படும்.
அதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாடுகளை மேற்கொள்ள கடமைப்பட்டுள்ளது. 1978/41 இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட மூலம் அது உரித்தாகிறது.
உண்மையான அபிவிருத்தித் தேவைகளை இனங்கண்டு மிகவும் பயனுள்ள அபிவிருத்தித் திட்டங்களில் கவனம் செலுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டுமெனவும், இல்லையெனில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.