சூடானின் போரினால் பாதிக்கப்பட்ட தலைநகர் கார்ட்டூமில் இருந்து அமெரிக்கத் தூதரக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்கப் படைகளால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இரண்டாவது வாரமாக தொடரும் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படைகளுக்கும் இடையிலான சண்டையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
தனது உத்தரவின் பேரில், அமெரிக்க இராணுவம் கார்ட்டூமில் இருந்து அமெரிக்க அரச ஊழியர்களை மீட்டெடுக்க நடவடிக்கையை மேற்கொண்டதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆறு விமானங்களைக் கொண்ட அமெரிக்க இராணுவ குழுவுடன் ஒருங்கிணைத்து அவர்களை நாட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியதாக சூடான் துணை இராணுவ படை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சூடானின் தலைநகர் கார்ட்டூமில் வன்முறை வெடித்ததில் இருந்து வெளிநாட்டு மக்கள் வெளியேற்றப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
நேற்று சனிக்கிழமை மட்டும் 150 க்கும் மேற்பட்ட மக்கள், இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச அதிகாரிகள் சவூதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திற்கு கடல் வழியாக வெளியேற்றப்பட்டனர்.