சில மாதங்களுக்கு முன் கனடாவுக்கு போக வெளிக்கிட்டு சிங்கப்பூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 303 தமிழ்க் குடியேறிகளைக் குறித்துக் கேள்விப்பட்டோம். அவர்கள் வியட்நாமில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களிற் பெரும்பாலானவர்கள் பொருளாதார காரணங்களுக்காக சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்தவர்கள் என்று ஐநாவும் உலக பொது நிறுவனங்களும் நம்புவதாகத் தெரிகிறது. இந்த அடிப்படையில் அவர்களை ஐநாவின் அகதிகளுக்கு பொறுப்பான அமைப்பு பொறுப்பேற்கத் தயாரில்லை என்றும் தெரிகிறது.இதனால் அப்புலம்பெயரிகளில் ஒரு தொகுதி நாடு திரும்பிவிட்டது. ஏனைய தொகுதி படிப்படியாக நாடு திரும்பி வருகிறது.
இவர்கள் யாரும் விருப்பத்தோடு நாடு திரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் நாட்டை விட்டுப் போக வேண்டும் என்ற விருப்பத்தோடு தான் ஆபத்தான கடல் வழியில் இறங்கினார்கள். எனவே அவர்கள் நாட்டுக்கு விருப்பத்தோடு திரும்பி வருகிறார்கள் என்று யாரும் கூற முடியாது. அவர்களில் ஒரு பகுதியினர் அவ்வாறு வர விரும்பாது ஐநாவிடம் அகதி அந்தஸ்து கோரி மேல்முறையீடு செய்தார்கள்.ஆனால் அந்த மேல் முறையீடுகள் முதல் தடவை நிராகரிக்கப்பட்டன.அதில் ஒரு தொகுதியினர் மீண்டும் விண்ணப்பித்தார்கள்.அதுவும் கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.அவர்கள் இந்த வாரம் நாடு திரும்புகிறார்கள்.இந்நிலையில், வியட்நாமில் மிஞ்சியுள்ள தமிழ்ப் புலம்பெயரிகளையும் நாட்டுக்குத் திரும்பி அனுப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
இதில் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், நாடு திரும்ப விரும்பாத புலம்பெயரிகள் ஐநாவுக்கு கொடுத்த மேல்முறையீட்டு விண்ணப்பங்களில் நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட சில பிரமுகர்களின் பரிந்துரைகள் அடங்கிய கடிதங்களையும் இணைத்துக் கொடுத்ததாகத் தெரிகிறது. அதாவது அவர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் கூறும் காரணங்களை மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்திக் கடிதம் கொடுத்திருந்தார்கள். ஆனால் ஐநாவோ அல்லது இதில் சம்பந்தப்பட்ட ஏனைய உலகப் பொது நிறுவனங்களோ அந்த கடிதங்களை பொருட்படுத்தவேயில்லை. அப்புலம்பெயரிகள் அனைவரையும் சட்டவிரோத குடியேறிகள் என்று ஐநா பார்க்கின்றது. அவர்கள் பொருளாதார காரணங்களுக்காக ஏஜென்ட்களுக்கு காசு கொடுத்து புலம்பெயர முற்பட்டவர்கள் என்று ஐநா கருதுகிறது. அதனால் அவர்களைத் திரும்பி அனுப்பும் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்படுகின்றன .
அதாவது ஐநா போன்ற உலகப் பொது அமைப்புக்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளுக்கு உள்ள மதிப்பை இது காட்டுகிறது எனலாமா ? அல்லது புலம்பெயரிகளின் விடயத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின் பின்னால் உள்ள அரசியலை ஐநா ஏற்றுக் கொள்ளவில்லையா? அதுதான் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள மதிப்பு என்றால், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி ஐநா உட்பட ஏனைய உலகப் பொது மன்றங்களிடம் தமிழ் மக்களுக்கான நீதிக்காகப் போராடப் போகிறார்கள்?
இதில்,ஒரு விளக்கம் கூறப்படலாம்.அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களுக்கு அங்கீகாரம் இல்லை. அதனால் அத்தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உலகப் பொது மன்றங்கள் அவ்வாறுதான் கையாளும் என்று. அப்படியென்றால் இந்த விளக்கத்தை ஒரு கதைக்காக ஏற்றுக் கொண்டால் அந்த அங்கீகாரத்தை பெறுவதற்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 13 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறார்கள்?
உள்நாட்டில் சிங்கள பௌத்த மயமாக்களுக்கு எதிராகவும் நிலப்பறிப்புக்கு எதிராகவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே போராடி வருகிறார்கள். அதிலும் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாகத்தான் போராடப் பார்க்கின்றது கூட்டாக சேர்ந்து போராட கட்சிகள் தயார் இல்லை. அதாவது கட்சிகளின் போராட்டந்தான்.தேசத்தின் போராட்டம் அல்ல.அது போலவே அன்னை பூபதி நினைவு தினம் திலீபன் நினைவு தினம் போன்றவற்றிலும் கட்சிகள் எப்படி திலீபனையும் அன்னை பூபதியையும் தத்தெடுக்கலாம் என்று தான் சிந்திக்கின்றனவே தவிர,அதை ஒரு தேசிய அளவிலான நினைவு கூர்தலாகவோ,அல்லது மக்கள் மயப்பட்ட நினைவு கூர்தலாகவோ ஒழுங்கமைப்பதற்கு தயார் இல்லை.அதாவது தமிழ் மக்களை ஒப்பீட்டளவில் ஆகப் பெரிய திரட்சியாக திரட்டிக் காட்டினால்தான் உலக சமூகம் திரும்பிப் பார்க்கும்.உதிரி உதிரியாகப் போராடி உலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்க முடியாது. சிவாஜிலிங்கத்தின் வீர தீரச் செயல்கள் அடுத்த நாள் பத்திரிகையில் செய்தியாக வரலாம்.ஆனால் அது ஐநாவையோ அல்லது உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ள முடிவெடுக்கும் அதிகாரத்தை பெற்ற கொள்கை வகுப்பாளர்களையோ தீண்டப் போவதில்லை.
தமிழ் மக்களுக்கு உலக சமூகத்தில் எத்தனை நாடுகள் நட்பாக உள்ளன? எத்தனை உலகப் பொது மன்றங்கள் தமிழ் மக்களின் பக்கம் நிற்கின்றன? கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்கள் உலக அரங்கில் எத்தனை புதிய நண்பர்களை பெற்றிருக்கிறார்கள்? இந்த கேள்விக்கு தமிழ் கட்சிகள் பதில் கூறுமா? உள்ளூரில் தங்களுடைய அரசியல் எதிரிகளை நண்பர்களாக வென்றெடுக்க முடியாத இந்த கட்சிகள் வெளிச் சமூகத்தை எப்படி வென்றெடுக்க போகின்றன ?
இது தொடர்பாக தமிழ் கட்சிகளிடம் ஒரு பொருத்தமான வழி வரைபடம் உண்டா? இல்லை. இங்கு ஒரு முக்கிய உதாரணத்தைச் சுட்டிக் காட்ட வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மன்னாரைச் சேர்ந்த தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஐநாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. வவுனியா, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இடம்பெற்ற மூன்று சந்திப்புகளின் முடிவில் ஒரு கூட்டுக் கடிதம் ஜனவரி 21 ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்தில் தமிழ் கட்சிகள் இரண்டு பிரதான கோரிக்கைகளை முன் வைத்தன. முதலாவது கோரிக்கை, பொறுப்பு கூறலை ஐநா மனித உரிமைகள் பேரவையிலிருந்து எடுத்து ஐநா பொதுச் சபையிடம் கொடுத்து அதன் மூலம் உலக பொது நீதிமன்றங்களிடம் கையளிக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது கோரிக்கை, சான்றுகளையும் சாட்சிகளையும் திரட்டுவதற்குரிய ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். அதற்கு குறிப்பிட்ட காலவரையறையும் அறிவிக்கப்பட வேண்டும்.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் அதிகம் வலியுறுத்தியது தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான்.தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொழுது இவ்வாறான கூர்மையான கோரிக்கைகளை முன் வைப்பது அக்கட்சி தான். ஆனால் அந்த கடிதம் அனுப்பப்பட்ட பின் என்ன நடந்தது? கடிதம் அனுப்பி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதில் ஒரு விடயம் மட்டும் ஒப்பேறி இருக்கிறது. அதுவும் கூட அரைகுறை தான். அது என்னவெனில் சான்றுகளையும் சாட்சிகளையும் தொகுப்பதற்கான ஒரு அலுவலகம்.
ஆனால் அடுத்த விடயம், அதுதான் முக்கியமானது.பொறுப்புக் கூறலை ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக முடியவில்லை.மட்டுமல்ல முன் சொன்ன சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகமும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அதாவது தொகுத்துப் பார்த்தால் பொறுப்பு கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக முடியவில்லை.
இந்த விடயத்தில் கடிதத்தில் கையெழுத்துப் போட்ட மூன்று கட்சிகளும் கடந்த 27 மாதங்களாக என்ன செய்து கொண்டிருக்கின்றன? குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த விடயத்தில் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது? பொறுப்புக் கூறலை ஐநாவுக்கு வெளியே கொண்டு போவது என்பது ஒரு கோரிக்கை மட்டும் அல்ல.அது ஒரு வெளியுறவு நடவடிக்கை.அதற்காக உலக நாடுகளின் தலைநகரங்களில் லோபி செய்ய வேண்டும். அந்த கட்சியிடம் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் உண்டு. அது ஒரு அடிப்படைப் பலவீனம். தமது மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் பலவீனமான பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கும் ஒரு கட்சி, உலக அரங்கில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு அங்கீகாரத்தையே கொண்டிருக்கும்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் சுட்டிக் காட்டப்பட்டதுபோல, கனடாவுக்குப் போக எத்தனித்த தமிழ் குடியேறிகளின் விடயத்தில் தமிழ் கட்சிகளின் கடிதத்துக்கு எப்படிப்பட்ட மரியாதை இருந்தது என்று பார்த்தோம். அதாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்ல வெளி உலகத்திலும் மதிப்பு இல்லை. இந்நிலையில் அந்த மதிப்பை எப்படி பெருக்கிக் கொள்வது? அந்த அங்கீகாரத்தை எப்படி பெறுவது? என்று சிந்தித்து அதற்காக உழைப்பதற்கு தமிழ் கட்சிகள் தயாரா? அவ்வாறு உழைக்க தயாரில்லை என்றால்,குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கும்போது கண்ணாடியில் நிலவை காட்டும் அரசியலைச் செய்யக்கூடாது. அல்லது அந்த அரசியல் ஒரு வாக்கு வேட்டை அரசியல்தான் என்பதனை வெளிப்படையாகச் சொல்லும் துணிச்சலும் நேர்மையும் இருக்க வேண்டும்.