பாகிஸ்தானின் வரவு, செலவுத்திட்ட பொருளாதார வளர்ச்சி இலக்காக 5சதவீதம் காணப்படுகின்றபோதும் அங்கு பொருளாதார வளர்ச்சி வீதம் 0.4ஆக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட சுமார் நான்கு மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்வார்கள் என்று உலக வங்கி கணித்துள்ளது.
இதற்கிடையில், நிலவும் அரசியல் நெருக்கடி, வெள்ளம் சார்ந்த பொருளாதார இழப்புகள், அந்நியச் செலாவணி சவால்கள் மற்றும் உள்நாட்டில் கடுமையான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 6 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதமாகக் குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
வொஷிங்டனை தளமாகக் கொண்ட முன்னணி நிறுவனமான, பாகிஸ்தான் டெவலப்மென்ட் அப்டேட் ‘2023 இல், வருமான இழப்புகளை ஈடுசெய்யும் அல்லது அதிக விலைகளின் தாக்கத்தைத் தணிக்கும் பொது மாற்றங்கள் இல்லாத நிலையில், குறைந்த நடுத்தர வருமானம் கொண்டவர்கள் வறுமைக்குள் சிக்குவர்கள்’ என குறிப்பிட்டுள்ளது.
உலக வங்கியின் மொத்தத் தேசிய வளர்ச்சி வீதமானது 0.4 சதவீதமாக இருந்தது, அதன் முந்தைய வளர்ச்சி மதிப்பீட்டாக ஜனவரியில் 2 சதவீதமாக இருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டம், நாணய மாற்று விகித ஏற்ற இறக்கம், வெள்ளம் மற்றும் அனர்த்த நிலைமைகள் ஆகியன பாகிஸ்தானின் நெருக்கடியில் செல்வாக்குச் செலுத்துவதாக உள்ளன.
உலக வங்கியின் பாகிஸ்தானுக்கான நாட்டு இயக்குநர் நஜி பென்ஹாசின், ‘பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியின் தீர்வுக்கு நீடித்த பெரிய நிதி மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.
இது புதிய நிதியுதவியைத் திறக்கவும், பணம் செலுத்தும் நெருக்கடியைத் தவிர்க்கவும் மற்றும் தனியார் மீட்பிற்கான அடித்தளத்தை அமைக்கவும் அவசியமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வுகளின் பிரகாரம், பாகிஸ்தானின், விவசாயம் மற்றும் ஆடைத் தொழில் போன்றன உற்பத்தி மற்றும் தொழிலாளர் வருமானத்தில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
அத்துடன் அந்நாட்டின் இறக்குமதி கட்டுப்பாடுகளின் விளைவுகள் உட்பட பல நிகழ்வுகள் ஏழ்மையான குடும்பங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
இந்த நிலைமைகளால் பாகிஸ்தானிக் உயர்ந்த உணவுப் பணவீக்கம் காணப்படுவதோடு கொள்வனவுத் திறனில் எதிர்மறையான தாக்கமும் ஏற்பட்டுள்ளது.
செலவுகள் அதிகரித்துள்ள போதிலும் நுகர்வை பராமரிக்க தேவையான சேமிப்புகள் இல்லை. மேலும், சர்வதேச பணம் அனுப்புவதில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குடும்பங்களில் பெருந்தாக்கத்தை தோற்றுவித்துள்ளது.
வரவிருக்கும் தேர்தல்களின் பின்னணியில் நிதிக் கொள்கையில் அரசியல் ரீதியாக உந்தப்பட்ட சறுக்கல்கள், அந்நியச் செலாவணி பணப்புழக்கத்தில் தடைகள் மற்றும் வெளிநிதி வரவுகளில் நிச்சயமற்ற நிலைகள், பொதுமக்களின் நெருக்கடிகளை மேலும் உயர்த்தும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் கூற்றுப்படி, அனைத்து மதிப்பீடுகளும் சர்வதேச நாணய நிதியத் திட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன, ஆகவே பாக்கிஸ்தான் கட்டமைப்பு மற்றும் மைக்ரோ பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் அல்லது பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.
அதன் ஊடாக மைக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு தேவையான கூடுதல் வழங்கல்களையும் வெளிப்புற நிதியையும் உறுதி செய்கின்றது. எனினும், அரசியல் ஸ்திரமற்ற நிலைமையானத, பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக உள்ளுர் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.