நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தின கூட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறைவு செய்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகளை பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மே தின நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு ஏ.ஈ.குணசிங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் மே தின பேரணி இம்முறை பி.ஆர்.சி. மைதானத்திலிருந்து ஆரம்பமாகி விஹார மகா தேவி பூங்காவை சென்றடைந்து, அந்த பூங்காவுக்கருகில் மே தின கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மே தின கூட்டத்தை கண்டி பொதுச் சந்தைக்கு முன்பாக நடத்த திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கொழும்பு, நுகேகொடை, கண்டி, ஹட்டன், பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் விசேட மே தின பேரணிகள் இடம்பெறவுள்ளன.
இந்தநிலையில், கொழும்பில் மாத்திரம் 3,500க்கும் மேற்பட்ட பொலிஸார் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஏனைய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பேரணிகளுக்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வீதியின் ஒரு மருங்கினை மாத்திரம் பயன்படுத்தி பேரணிகளை முன்னெடுக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் மக்களை அசௌகரியத்திற்குள்ளாக்கும் மற்றும் ஏனைய முறையற்ற செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.