இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை பேருந்துகள் இன்றையதினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
ஆடைத்தொழிற்சாலைக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று வழித்தடம் இல்லாமல் பயணிகளை எரிச் செல்வதால் ஏற்பட்ட முரண்பாட்டினால் குறித்த பணிபகிஸ்கரிப்பு இடம்பெறுகின்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா சாலை ஊழியர்கள். “கடந்த சில நாட்களாக ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றியிறக்கும் தனியார் பேருந்து ஒன்று எமது சேவைக்கு முரணான வகையில் வழித்தடம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்றது. அதனால் முரண்பாடு ஒன்று ஏற்பட்டது.
அதனடிப்படையில் எமக்கு எதிராக எமது காப்பாளர் தாக்கியதாக பொய்யான வழக்கு ஒன்றை பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவர்கள் பதிவு செய்திருந்தனர். அவ்வாறு தாக்குதல் எதனையும் நாம் மேற்கொள்ளவில்லை அதற்கு காணொளி ஆதாரம் உள்ளது.
இது தொடர்பாக நாம் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது பொலிசாருக்கு முன்னபாக அந்த பேருந்து தரப்பினர் எங்களை அச்சுறுத்தினர்.சாட்சி சொல்ல வந்த பொதுமக்களையும் அச்சுறுத்தினர். பூவரசங்குளம் பொலிசாரும் அவர்களுக்கு உடந்தையாகவே இருந்தனர். இந்த விடயத்தில் பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பக்கச்சார்பாகவே செயற்படுகின்றார்.
தொடர்ச்சியாக வடக்கின் ஏனைய சாலைகளின் சாரதி காப்பாளர்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. எமக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலையில் பணியை செய்கிறோம். இது எமக்கு மனவிரக்தியை ஏற்படுத்துகின்றது.
எனவே அந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்படவேண்டும். இதற்கான தீர்வு கிடைக்காவிடில் நாளையதினம் மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்போம்” என்றனர்.