சர்வதேச அளவில் நாட்டுக்கு நாடு போதைப்பொருட்கள் பல்வேறு மார்க்கங்களால் கடத்தப்படுகின்றன. இவ்வறு கடத்தப்படும் போதைப்பொருட்கள் எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்திவாய்ந்த காரணியாக விளங்குகிறது.போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் உடல், உள்ளம் பாதிக்கப்படுவதுடன், அவர்களது குடும்பமும் சமூகமும் சீரழிகின்றன. இறுதியில் மரணத்தின் விளிம்புக்கே கொண்டு செல்கின்றது.
குறிப்பாக, இலங்கையில் அண்மைக்காலமாக போதைப்பொருட்கள் பெருமளவில் மீட்கப்பட்டாலும், தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அது குறைவதாக இல்லை.ஏதேவொருவகையில் கொண்டுவரப்பட்டு சதாரண கிராம மட்டங்கள் வரையில் வியாபிப்பதற்கும், பாடசாலை சிறுவர்களே அதற்கு அடிமையாக்கப்படுவதற்கும் வித்திடுவதாக உள்ளது.
முன்னதாக, போதைப்பொருள் கடத்தலில் இலங்கை முக்கிய இடமாக விளங்கியதாக அக்காலத்தில் குற்றச்சாட்டொன்று நிலவியது. அதாவது வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படுகின்ற போதைப்பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு, அதன் பின்னர் இங்கிருந்து வேறுநாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
போதைப்பொருள் கடத்தலில் இடைத்தங்கல் தளமாக இலங்கையை கடத்தல்காரர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால் இலங்கையில் போதைவஸ்து ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக அந்நடவடிக்கை தடுக்கப்பட்டது.போதைப்பொருள் கடத்தல்கள் தற்போது கணிசமான அளவு குறைந்துள்ள போதிலும், ஆங்காங்கே சம்பவங்கள் தொடர்கின்றன.
இலங்கைக்கு எங்கிருந்து போதைப்பொருட்கள் வருகின்றன என்ற ஆய்வுகளை மேற்கொள்கின்றபோது, அதிகளவான போதைப்பொருட்கள் பாகிஸ்தான் மார்க்கமாகவே இலங்கைக்குக் கொண்டுவரப்படுதாக ஏராளமான தகவல்கள் வெளியாகியுள்ளன.போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்தகவல் வெளியாகியிருந்தது.
திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகளால் போதைப்பொருள்கள் நாட்டுக்குள் கடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை காரணமாக அங்கு போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் தீவிரமாகியுள்ளன.
அத்துடன் போதைப்பொருள் விடயத்தில் அந்நாட்டில் முழுமையான அவதானம் செலுத்தப்படாத நிலைமைகளும் உள்ளன.ஆகவே போதைப்பொருள் குற்றவாளிகள் இந்நெகிழ்வுத் தன்மையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் ஏதோவொரு வகையில் போதைப்பொருட்களை சர்வதேச அளவில் அங்கிருந்து கொண்டு செல்வதற்கே முனைகின்றார்கள்.
அதுமட்டுமன்றி பாகிஸ்தானில் அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. வறுமை நிலைமை, அதிகரிக்கின்றது. தொழில் இழப்புக்கள், பசி, பட்டினி அதிகரிக்கின்றது.இதனால், இயல்பாகவே போதைப்பொருள் விற்பனைக்குள் நபர்கள் சிக்கிக் கொள்ளும் நிலைமைகள் அதிகரித்து வருவதாகவும், இந்த நிலைமைகளை அரசாங்கம், பொலிஸார் உள்ளிட்டவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைமைகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இலங்கையானது, பாகிஸ்தான் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையிலான பயணங்கள், பொருட்கள், சேவைகள் பரிமாற்றம் தொடர்பில் தீவிரமான அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி, இலங்கையின் பொருளாதார நிலைமைகள் மேம்பட்டாலும், இன்னமும் முழுமையான மீட்சியான சூழல் ஏற்படாமையின் காரணத்தினால் உள்நாட்டில் உள்ள இளைஞர்கள் தொடர்பில் தீவிரமான அவதானம் செலுத்த வேண்டியது கட்டாயமாகின்றது.இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்று இலங்கை மக்களில் ஒருசாரார் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் மரணதண்டனையை எதிர்க்கின்றனர்.அதுபற்றிய விவாதங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும், அந்த விடயம் தொடர்பில் இன்னமும் தீர்க்கமான முடிவொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.அண்மைய காலத்தில் போதைவஸ்து விற்பனையாளர்களால் மாணவர்களும், சிறுவர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர்.
அவர்கள் முக்கியமான பாடசாலைகளை இலக்கு வைத்து தமது போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள்.இந்த நிலைமைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கான சட்டம், ஒழுங்கு பிரிவினர், போதைவஸ்து தடுப்பு பிரிவினர் பாரபட்சமின்றி செயற்பட வேண்டும். அதன் மூலமாகவே எதிர்கால சந்ததியை கட்டியெழுப்ப முடியும். இந்த விடயத்தில் அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது.