வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் அல்லது ஜூன் முதலாம் திகதி முதல் தமது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு செல்லாமல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இ-பாஸ்போர்ட் நடைமுறைப்படுத்துவது குறித்தும் குழு ஆலோசித்ததுடன், இந்த செயல்முறையை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
இதன் பொது ஒன்லைனில் விசா விண்ணப்பத்தில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேற்கூறிய நோக்கத்திற்காக, வெளிநாட்டவர்கள் சிரமமின்றி விசாவைப் பெறுவதற்குத் தேவையான பொறிமுறையை விரைவாகத் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும், இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டினருக்கான வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஐரோப்பா போன்ற அதிக வருமானம் ஈட்டும் நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதன் முக்கியத்துவம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
குழுவின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா, எஸ்.எம்.எம்.முஷாரப், சாகர காரியவசம், யதாமினி குணவர்தன, ஹரிணி அமரசூரிய ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்ட அதேநேரம் குழுவின் தலைவரின் அனுமதியுடன் சந்திம விரக்கொடி கலந்துகொண்டார்.
வெளிவிவகார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.