சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.
இதன்போது இதுவரையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர் கலந்துரையாட உள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்
இந்த சந்திப்பில் அவர் ஜனாதிபதி, மத்திய வங்கி அதிகாரிகள், சபாநாயகர் உள்ளிட்ட மேலும் சில தரப்பினரையும் சந்திக்க உள்ளார்.
அத்துடன் ஒக்டோபரில், இலங்கை தொடர்பான முதலாவது மீளாய்வு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களையும் , சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் வழங்குவார் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.